தென்பெண்ணையின் பண்பாட்டு ஈரம்- ஆ.இரவிகார்த்திகேயன்

 அகப்பாடல்(25) 
                    முழவின் ஒலி இடைவிடாது ஒலிக்கும் திருக்கோயிலூர்க்குத் தலைவனாகிய நீண்ட தோளினையுடைய  காரியின் கொடுங்கால் என்னும்   ஊரின் அழகிய பெரிய பெண்ணையாற்றின் முன் துறையில் உள்ள   நுண்ணிய கருமணலை ஒத்த  கூந்தலையுடைய என்மகளை அறியார் யாருமில்லாத நாட்டின்கண் அவள் துணைவன் அழைத்து சென்றனன் என்ற பாடலை குடவாயிற்கீரத்தனார்..பாடியுள்ள பாடல்

 பெண்ணையாறு. ஈரமான தன் மணலோடு. தான் அதன் கரையோரமக்களால் காலம் காலமாக போற்றப்படுகின்றது என்பதை தான் சங்க இலக்கிய சான்றுகளோடு பண்பாட்டின் தொன்மையை சுட்டிகாட்ட  இப்பாடலை காண்கிறோம்

 பெண்ணை என்றால்  பனை என்று பொருள் கூறுவர்.வேரில் நீர் நிரப்பி கோடை வெயிலை தாங்கும் நீண்டு உயரும்பனைமரம் போல் மணலில் ஊற்றுகண்ணாய் மணலுக்குள் நீரைதேக்கி
கோடையிலும் காக்கும்இயல்பு பெண்ணையாற்றின் சிறப்பு.

மலையமான் தந்த பரிசுகளை
மண்ணுக்குள் ஒளித்த
பெண்ணையாற்றின்
ஊற்றுக்குள் கைவிட்டுக்
குழந்தைகள் தேடுவர்
 என்ற கவிதை இப்பொழுதும் பாடப்படுக்ன்றது

வெண்ணை உருகும் முன் பெண்ணை உருகும் என்பது இதன் காட்டாற்று தன்மையை காட்டுகின்றது, பெரும்பாலும் பாறைகளுக்கிடையே பாய்ந்துவரும் தென் பெண்ணை மிக நீணட மணல் சமவெளிப் பரப்பாக திருக்கோயிலூர்க்கு முன் விரிந்த மணல்ப் பாதையைக் கொள்கின்றது. ஆதித்திருவரங்கம் தொடங்கி திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)வரைப் பெண்ணை வளநாடு என்றே குறிப்பிடலாம்

பெண்ணை ஆற்றில் நடைபெறும் ஆற்றுத்திருவிழாவில் இருக்கரையோர மக்களும் வருடாவருடம் தை-5 ஆம் தேதி கூடி நீராடுவர். பெண்ணை ஆற்றின் பாசன வடிகால் பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த  கோயில்களில் இருந்து சாமி சிலைகள் இசைமுழங்க ஆற்றின் கரைகளில் அணிவகுத்து தீர்த்தவாரிக்கு வந்து நிற்கும்.பொதுவாக உலாவரும் சாமி சிலைகளை வரவேற்று வணங்கும்நடைமுறை உள்ள மக்கள் அந்த முக்கியத்துவம் அளிக்காமல் இங்கு ஆற்றில் மணலை பிடித்து சிறு கோபுரம் எழுப்பி ஊற்றுநீரில் நீர்வளாவி பூ போட்டுபழம் வைத்து வணங்கி  சிறப்பு செய்து செல்வது முக்கிய பண்பாடாக காணலாம்.

எங்கள் குடும்பத்தில் நீரிடங்களில் தொடர்புடைய தெய்வமாக விளங்கும் ஏழு கன்னிமார் வழிபாடு ஏனாதிமங்கலத்தில் உள்ள தென் பெண்ணையாற்று நடுவில் உள்ள மணற்பகுதியில் ஏழுமணல் கோபுரங்களை எழுப்பி சந்தனம் மஞ்சள் விபூதி குங்குமம் இட்டு பூகுவித்து பொங்கல் வைத்து பம்பை உடுக்கை இசை எழுப்பி பெண்கள் ஊற்றுநீரில் நீர் விளாவி வழிபாடு செய்யும் பழக்கம் குலதெய்வவழிபாடாக தொடர்கின்றது

 அவ்வூர் கரையில் உள்ள அய்யனார்கோயிலில் ஏழுகன்னிமார் உருவம் கல்லில் செதுக்கப்பட்டிருந்தாலும்  அதனை பூசனை செய்யாது பகல் உச்சிப்பொழுதில் சுட்டெரிக்கும் மணல் பரப்பில் இவ்வழிபாட்டை தொடரும் மரபு கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது

மண்ணும் நீரும் கொண்டாடுவது பெண்ணையாற்றுபண்பாடு. . ஆற்றுமணல் அரசு துணையுடன் கொள்ளை போகும் இந்நாளில் அப்பண்பாடு அழிவை சந்திக்கின்றது. எங்கள் குடும்பத்தினர் கன்னிமார் வழிபாடு செய்ய அழைத்தார்கள் நான் அங்கு பிரமாண்டமான இயந்திரங்கள் மூலம் மணல் கொள்ளை அடிக்கப்படுகின்றது எங்கே போய் வழிபாடு செய்வீர்கள் விழுப்புரம் செல்லியம்மன் கோயிலில்கன்னிமார் சிற்பங்கள் உள்ளது இங்கே கும்பிட்டு செல்லுங்கள் என்றேன். அதற்கு அவர்கள் மறுத்து அங்குதான் வணங்க வேண்டும் என்றுவற்புறுத்தி அழைத்தனர். குடும்ப கடமையாக அவர்களுக்கு உதவிட உடன் சென்றேன். பெண்ணையாற்றின் முதுகு எலும்பை ஒடிப்பது போல் இயந்திரங்கள் மணலில் செயல்பட்டன.ஆற்றில் தடம் அமைத்து  கண்ணீர் சிந்தும் மணல்களை அள்ளி லாரியில் அடைத்து எறும்பின் ஊர்வலம் போல் சென்று கொண்டிருந்தன. அவ்வூர் பெரியவரை அழைத்து என்ன கொடுமை இது ஊரில் எப்படி இதனை அனுமதித்தீர் என்றேன். எங்க தம்பி வீட்டுக்கு வீடு ரேசன்கார்டுக்கு மாசம் இரண்டாயிரம் எல்லா கோயில்களுக்கும் புதுசாகட்டிடம் கட்ட பணம் அரசியல் வாதிகளுக்கு பணம் பெரியவயல்வெளி வச்சி இருக்கிற மிராசுங்க இடத்துல லாரிநிறுத்த கொழுத்த வாடகை அதிகாரிங்களுக்கு கவனிப்பு என அட்டகாசம் செய்யுறாங்கள் நாம பேசுனா போலீசு என்னான்னு நிற்காறான் என்றார்

நான் என் குடும்பத்தினரிடம் அடுத்தமுறை நீங்க வரும் போது கையில் அள்ளி குவித்து கோபுரம் எழுப்பிகன்னிமார் கும்பிட மணல் இருக்காது. அர்த்தம் இல்லாமல் இங்கேதான் கும்பிடனும் வந்தீட்டீங்க என்றேன். பெண்கள் என்பேச்சை காதில் வாங்காமல் ’ஆத்தா கூலி கொடுப்பா’ என்று ஒருமணல் திட்டில் அமர்ந்து தமது பூசைபணிகளை செய்து முடித்தனர் 

மணல் அள்ள நீதிமன்ற தடைஆணை விதிக்கப்பட்ட செய்தி வந்த போதுகண்ணகி இடத்தில் கன்னிமார் சென்று வாதாடியிருப்பார்களோ என்று மனைவி கேட்டாள் இல்லை கன்னி மார் வழிபாடு என்பது உங்களுக்கு ஒரு சமயம் சார்ந்த பண்பாட்டு சடங்கு. ஆனால் மண்வளத்தை இழக்காமல்  போராடி வெற்றி பெறவேண்டும் என்றுதான் மணல் கொள்ளையை தடுத்துஒருவன் நிறுத்தியுள்ளான். மண்ணையும் நீரையும் கொண்டாடுபவன்தான் இம்மண்ணின்மரபுக்காரன். கானல் நீராய் உங்களுக்கு தெரியும் கன்னிமார் தெய்வத்தின் இருப்பைஅவன் தான் காலம் நீட்டிப்பு செய்துள்ளான் என்றேன்

திருக்கோயிலூர் அணை, எல்லீசுசத்திரம் அணை, தளவானூர் அணை, சொர்ணாவூர் அணை என்ற தடுப்பணைகள்  பெண்ணையாற்றின் குறுக்கே இருந்தன. எல்லீசுசத்திரம் அணை எழுபது ஆண்டுகாலவரலாற்றை முடித்துகொள்ளவைத்தனர்அதிகாரிகள் இரண்டு ஆண்டுகாலவெள்ளத்தைதாங்காத அளவில் மண்ணில் கால்பதியாத தடுப்பணைஅரசியல்வாதிகள்தளவானூரில் தாரைவார்த்தனர்

பருவமழையை நம்பியே தமிழகத்தின்.. நீர்வளம் உள்ளது. வடகிழக்கு பருவமழையின் போது தான் பெண்ணைஆற்றுக்கு நீர் கிடைக்கும் கொண்டல் மாமழை என சங்க இலக்கியம்கடலினால் உண்டாகும் மழை என்றுவிரித்துக்கூறுகின்றது குணக்கடல் முகந்த கொள்ளைவானம்                          ( அகப்பாடல் 278) என கிழக்கு கடலில் அப்படியே கைவிட்டு அள்ளிக் கொள்ளையடிக்கும் வானம்எனமாமழைகாட்சியைமழைக்காலத்தையும் சுட்டுகின்றது

மழைநீர் ஆற்றில் வெள்ளமென கடலில் ஓடி  முடிந்து விடாமல் ஆற்றின் இருபுறங்களிலும் கால்வாய் உருவாக்கி ஏரி, குளம், குட்டைகளுக்கு  நீரை பங்கிட்டனர்.ஆற்று நீர் எவ்வாறு ஊற்றுநீராய் பயன் அளிப்பது போல். ஏரிநீர் பாசன வசதிகளுக்கு பயன்படுவது போல் சுமார்  ஐந்து கி..மீ . பகுதிக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தும்.பாசனவசதிபெறும் விவசாயிகள் முறைவைத்து  ஏரிநீரையும் கால்வாய் நீரையும் பயன் படுத்தும் நீர்மேலாண்மையின்பண்பாட்டு வடிவமாக  தென்பெண்ணைவளமிக்க பகுதியில் அய்யனார் கோயில்கள்நிறைந்து காணப்படுகின்றதுமழைதெய்வமான செல்லி அல்லது மாரிக்கு சக்கரைபொங்கல் வழிபாடு நடத்தும் மக்கள்  வேளாண் பாசனநீரிடமேலாண்மை தொன்மமான அய்யனார்க்கு பால் கலந்த பொங்கலிட்டு வழிபாடு செய்வர்

 மழை மற்றும்நீரிடங்களின் தெய்வங்களுக்கு வழிபாட்டில் இடிமின்னல் போல இசையெழும் பம்பை உடுக்கை பறை  கருவிகள்  இசைக்கப்படும். மும்மாரிமழை பொழியுமா, நோய் நொடி இல்லாமல் காப்பாயா? என்ற பொதுச்சிந்தனையே வழிபாட்டின் நோக்கமாக தெய்வங்களுக்கு வேண்டுதல் விடுக்கப்படும்.

 ஆறுகளும் ஏரியிம் மழையினால் நேர் நிறைந்து இருக்கும் போது தான் ஈரப்பதம் அதிகரித்து உயிரினங்கள் வாழும் சூழலியல் காக்கப்படும் ஆறுகளிலும் ஏரிகளும் மணற்கொள்ளைகள் நடக்கும் போதுமழைநீர்மண்ணில் உறிஞ்சப்படும் சூழல் இருக்காது. அப்பகுதி வெப்பம் அதிகரிக்கும் இதனால்  இதுவரை நீரிடங்களில் வசிக்கும் பாசிகள், தாவரங்கள், புழுக்கள். பூச்சிகள்,நத்தைகள், தவளைகள்ம் மீன்கள், ஆமைகள், போன்ற உயிர்னங்களும் அவற்ரை உணவாக உட்கொல்லும் கொக்கு , நாரை, கழுகு, மீன் கொத்திபோன்ற பறவையினங்களும்மறைந்து விடும். அதுமட்டுமல்ல காற்றின் ஈரப்பதம் குறைவினால் மகரந்த  தூள்கள் செயலற்றும் போகும் சூழலியல் அபாயம் ஏற்பட்டு உணவு உற்பத்தி பாதிக்கும். இயற்கையின் பேரழிவினால் மண் வளம் பாதிப்பாகும்.. எஞ்சியிருக்கும் நிலத்தடிநீர் விற்பனை பொருளாக உறிஞ்சப்படுவதால் ஆபத்தை நோக்கி நகர்கிறோம் தென்பெண்னையாறு அதற்கு விதி விலக்கு அல்ல என்பது தான் உண்மை

நீர்நிலைகளில்
காணாமல் போன
கன்னிமார்களை
சுய உதவிக்குழுக்கள்
அழைத்துச் சென்றார்களா
என
 குலதெய்வம் கும்பிட வந்தவர்கள் 
குறிகேட்பார்கள்..



..





Comments

Popular posts from this blog